இலங்கையின் புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அரசியல் சாசன பேரவையினால் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் இன்று அரசியல் சாசன சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அரசியல் சாசன பேரவையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல் சாசன பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடிய போதே, அரசியல் சாசன உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அடிப்படை உரிமைகள் தொடர்பான உப குழு, நீதித்துறை தொடர்பான உபகுழு, நிதி தொடர்பான உப குழு, பொது மக்கள் பாதுகாப்பு, காவல்துறை, சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உப குழு, அரச சேவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான உப குழு மற்றும் மத்திய அரசுக்கும் – மாகாணங்களுக்கும் இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவதற்கான உப குழு ஆகியவற்றின் அறிக்கைகளே இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள உப குழுக்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, அந்த உப குழுக்களுக்கு தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
உப குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்கான உத்தேச அறிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த அறிக்கை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவும் உத்தேச அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவரின் இந்த கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.