இடப் பெயர்வுகள், சொத்து இழப்புக்கள் போன்ற பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் இன்றும் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களிடையே காணப்படும் அடிப்படைத் தகைமையாகிய கல்வி மீதான ஈடுபாடே அதற்கு மூல காரணம் என்றும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
மாணவர்கள் கூடுதலான நேரங்களை வெறுமனே வீண் பொழுதாகக் கழிக்காமல் கல்வி நடவடிக்கைகளிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு ஈடுபடும் பட்சத்திலேயே சிறந்த கல்விச் சமூகத்தை, ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவியர் யாராவது தெரிந்தோ, தெரியாமலோ வீணான தீயபழக்க வழக்கங்கள், முரட்டுக்குணம் ஆகியவற்றை கொண்டவர்களாக விளங்குவார்களே ஆயின், அவர்களைத் திருத்துவது மாணவ சமுதாயத்திற்கும் உரித்தான பணி என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது சமூகத்தை பின்தங்க விடக்கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ள அவர், எல்லோரும் சேர்ந்து முன்னேற வழி அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவொரு மகத்தான கைங்கரியம் என்றும், சேர்ந்து முன்னேற அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.