சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் மகிந்த ராஜபக்ச பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மணலாறில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ள மயிலங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அங்கு நடாத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
அங்கு கூடியிருந்த மக்களை விழித்து, வடக்கிலுள்ள சிங்கள மக்களாகிய நீங்கள், இப்போது சிறுபான்மையினராக மாற்றப்பட்டுள்ளீர்கள் என்பதே உண்மையான நிலவரம் என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி தமிழர்களின் இராச்சியமாக்கும் நடவடிக்கையையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிய நாடான இலங்கையில், அதிகாரங்களை பிரித்துக் கொடுக்குமாறு தமிழ் மக்கள் கேட்கின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர், அவ்வாறு அதிகாரங்களைப் பிரித்துக் கொடுக்க, இந்தியா , அமெரிக்கா போன்று இந்த நாடு பெரியது நாடு இல்லை என்றும் விபரித்துள்ளார்.
சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அதற்கு கூட்டு எதிரணி இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் 30 ஆண்டுகள் நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை ஒற்றுமைப்படுத்தியுள்ளதாகவும், ஆகவே மீண்டும் நாடு துண்டாடப்படுவதற்கு அனுமதிக்கவோ, இடமளிக்கவோ முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இவ்வாறே கிழக்கில் உள்ள விகாரை ஒன்றிற்கு சென்று வழிபாடு நடாத்தியதன் பின்னர், மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதியை மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசியதாகவும், அதன் பின்னரே தேரரின் அடாவத்தனங்கள் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அரசாங்கத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.