தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
தமிழர் தாயகப் பிரதேசத்திலும், மாவீரர் வாரம் இம்முறை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
1989ஆம் ஆண்டிலிருந்து மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டு வருவதுடன், வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூர்வதற்காக நவம்பர் மாதம் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்படும் வரையில் தமிழர் தாயகத்தில் மாவீரர் வாரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வந்த போதிலும், 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் தாயகத்தில் இரகசியமாகவே ஆங்காங்கே மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் சூழ்நிலை உருவானது.
எனினும் தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் நினைவு கூரப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தமிழர் தாயகத்திலும் பகிரங்கமாக மாவீரர் வாரம் நினைவுகூரப்படும் என்று பல்வேறு அமைப்புக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
சனநாயகப் போராளிகள் கட்சி, வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ரவிகரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை வெளிப்படையாகவே மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.