ஒன்ராறியோவின் பொய்ன்ட் எட்வேர்ட்டையும்(Point Edward), மிச்சிக்கனின் போர்ட் ஹியூரோனையும்(Port Huron) இணைக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான “Blue Water” பாலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அந்த பாலத்தில் கடமையாற்றும் பணியார்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற் சங்கத்திற்கும், மத்திய அரசின் பாலங்கள் தொடர்பிலான கூட்டுத்தாபனத்திற்கும் இடையே இடம்பெற்ற பேச்சுக்ளில் இணக்கம் காணப்படாமையை அடுத்தே இந்த பணிப் புறக்கணிப்புக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இன்று காலை ஆறு மணியில் இருந்து குறித்த அந்த பாலத்தில் பணியாற்றும் 47 ஊழியர்களும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியார்களுக்கு வழங்ப்பட்டு வந்த சலுகைகளில் பாரிய குறைப்பினை மேற்கொள்வதற்கும், பல்வேறு உரிமைகளை மீறப் பெற்றுக்கொள்வதற்கும் தொழில் வழங்குனரான கூட்டுத்தாபனம் முயன்றுவரும் வேளையில், அவ்வாறான செயற்பாடுகளால் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம் பல ஆண்டுகளுக்கு பின்நோக்கி செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் தொழிற்சங்கத்தினரே தம்முடன் முழுமையான நம்பிக்கையுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட முன்வரவில்லை என்று மத்திய அரசின் பாலங்கள் தொடர்பிலான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டாலும், குறித்த அந்த பாலம் திறந்து விடப்பட்டே இருக்கும் எனவும், அதனூடான போக்குவரத்துகள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.
குறித்த அந்த பாலமே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளதுடன், அதனூடாக நாளாந்தம் 15,000ற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.