சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரை இன்று சந்தித்துள்ளார்.
அமைச்சர் இன்று நடாத்திய இந்த சந்திப்பில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் பெற்றோர்,பல்கலை மாணவர்கள், உபவேந்தர் மற்றும் பல்கலை விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ் பல்கலைகழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது,முன்னைய சந்திப்புக்களின் போது அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
அவற்றுக்கு பதிலளித்த சுவாமிநாதன், முதலாவது நடவடிக்கையாக கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கப்படும் எனவும் நட்ட ஈடு வழங்கப்படுவது தொடர்பில பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த அந்த குடும்பத்தினருக்கு தகமைகள் இருக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் வீடுகளை இராணுவத்தினர் கட்டிக்கொடுப்பார்கள் என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்த கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த உயிரிழந்த மாணவன் சுலக்சனின் தந்தை, தாங்கள் வீட்டையோ, காணியையோ கோரவில்லை என்றும் , நீதியான விசாரணை நடாத்தப்பட்டு,குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.