இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத வரை, நாட்டில் வேறெந்த பிரச்சினையும் தீர்க்கப்பட போவதில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று இடம்பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருப்பதே இனப்பிரச்சினைத் தீர்வு இழுத்தடிப்பதற்கான காரணமாக அமைந்துள்ளது என்ற வகையிலும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைதான் இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதற்கு பிரதான காரணமாக இருந்து வருகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்க்குற்றம், அரசியல் படுகொலைகள், சட்டவிரோத கொலைகள், மனிதக் கடத்தல்கள், காணாமலாக்குவது அனைத்துமே நேரடியாகவோ மறைமுகமாகவோ நடந்தேறியிருப்பதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலிருப்பதே அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறலைக் கோரியிருக்கும் அதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வையும் வலியுறுத்த வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக் கூறலை மாத்திரம் வலியுறுத்திக் கொண்டு ஒருபக்கமாகச் செல்வோமானால் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வென்பது எட்டாக்கனியாகி விடும் என்பதுடன், அப்படி நடந்தால் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெற ஆரம்பித்து விடும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆகவே பொறுப்புக்கூறல் கோரிக்கை மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வலியுறுத்தல் ஆகிய இரண்டையும் சமாந்தரமாகக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றும் அவர் விபரித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு சாணக்கியமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் வழிமுறை என்றால்,தனது வழிமுறை சகவாழ்வு வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிமுறை ஆயுதம் ஏந்திப் போராடும் வழிமுறையாக இருந்தது என்றும், அப்பொழுது அனைத்து தமிழ் மக்களும் மறைமுகமாகவோ அன்றி நேரடியாகவோ அவருக்குப் பின்னால் இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டுதானிருந்தார்கள் என்பது அனைவரும் நன்கு அறிந்துள்ள விடயம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் இதன்போது தெரிவித்துள்ளார்.