கனடாவில் இருந்து இலங்கை சென்ற போது, அங்கு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு உத்தரவிட்டுள்ளது.
றோய் சமாதானம் என்ற கனடியத் தமிழரே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளான நிலையில், இலங்கையில் தாம் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கியநாடுகள் குழுவிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு, குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அவருக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் இருந்து கனடாவில் புகலிடம் தேடிய றோய் சமாதானம் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கை சென்றிருந்த போதே கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டைச் சோதனையிட்ட காவல்துறையினர், நண்பர் ஒருவரின் வர்த்தகத்துக்கு உதவும் நோக்கில் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த600 கைபேசிகளைக் கைப்பற்றியிருந்தனர்.
அந்த கைபேசிகளை வைத்திருந்ததற்காக, இலங்கைக் காவல்துறையினர் இலஞ்சம் கோரிய போது அதற்கு றோய் சமாதானம் உடன்பட மறுத்தார் என்றும், இதனால் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்ட இவர், விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் மீது மேலும் குற்றச்சாட்டுக்களை சுமந்தி மோசமான சித்திவதைக்கு அவர் உட்படுத்தப்பட்ட நிலையில், இறுதியா இலத்திரனியல் கருவியை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு, நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்தி விடுதலையானார்.
2011ஆம் ஆண்டு கனடா திரும்பிய றோய் சமாதானம், கனடிய நாடாளுமன்றத்தினுள் அனைத்துலக மனித உரிமைகளுக்கான உபகுழுவின் முன்பாக சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.