தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில், இந்தப் பிரச்சினையை அனைத்துலகம் வரை கொண்டுசெல்லவும் தயாராக இருப்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் எச்சரித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அந்த அமைப்பு கையெழுத்துப் போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சேகரிக்க்பபட்ட கையெழுத்துக்களையும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான மனு ஒன்றையும் இலங்கை சனாதிபதியிடம் நாளை மறுநாள் கையளிக்கவும் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று கொழும்பில் இன்று நடாத்தப்பட்ட போதே, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திற்கு தனது எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், நல்லாட்சியில் சனாதிபதிகூட இனவாதமாகச் செயற்படுகின்றாரா என்பது தங்களுடைய கேள்வியாக உள்ளது என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.
சனாதிபதி இனவாதி இல்லையென்றால், நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் கருதினால், உடனடியாக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் நல்லாட்சியை நம்பி வாக்களித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அருட்தந்தை சக்திவேல், இந்த நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்கான கோரிக்கையும் இதன்போது விடுத்துள்ளார்.