யப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் பூமியின் அடியில் 11.3 கிலோமீட்டர் ஆழத்தில் 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யப்பானின் புவியியல்சார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்க புவியியல்சார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து புகுஷிமா வட்டாரப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஒரு மீட்டர் உயர அளவு கொண்ட ஒரு சுனாமி பேரலை புகுஷிமா அணு உலைப் பகுதியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அணு ஆலைகளில் சேதம் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நியூசிலாந்து நாட்டினையும் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
நியூசிலாந்தின் வடக்கு தீவில், பால்மெர்ஸ்டன் நோர்த்துக்குச் சுமார் 138 கிலோமீட்டர் தொலைவில், 37 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் யப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களின் விளைவாக எற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டீனா,சிலி ஆகிய நாடுகளை நேற்று முன்தினம் வலுவான நிலநடுக்கங்கள் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.