தமிழர்களின் பூர்வீக வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ள அவர், அதுபோல்ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்று புத்தகங்கள் எதுவுமே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வரலாற்றுப் புத்தகங்களில், தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மன்னர்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை எனவும், ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், அந்த வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு வசனமேனும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரம் – 6,7,8 மற்றும் 9ஆம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்றுப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறுகளே இல்லை எனவும், வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்ற நிலையில், சித்திரத்தில் அதனைவிடவும் மோசமான நிலைமையொன்றே தற்போது காணப்படுவதாகவும், கற்பிக்கப்படும் சித்திரங்கள், வடிவங்கள் மற்றும் கலை வடிவங்கள் அனைத்தும் சிங்கள மரபையே கொண்டிருப்பதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ் மரபுகள் முற்றாக மறைக்கப்பட்டு விட்டதாகவும், தமிழ் மன்னர்களின் வரலாறுகள் முற்று முழுதாக இல்லாமற் செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்கள், ஆரியர்களாக இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, தமிழர்கள் இரண்டு இனங்களாக இங்கு குடியிருந்திருந்திருக்கிறார்கள் என்ற போதிலும், அவையெல்லாம் மறைக்கப்பட்டு, வரலாறு திணிக்கப்படுவதாகவும் அவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கிலேயருக்கு எதிராக சிங்களவர்கள் மட்டுமன்றி தமிழர்களும் போராடியதுடன், இந்து – பௌத்த பாடசாலையை சேர்.பொன் இராமநாதனே நிறுவியதாகவும், பெளர்ணமி நாளை விடுமுறை நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற யோசனையையும் அவரே முன்வைத்ததாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இவையெல்லாம் மறைக்கப்பட்டு விட்டதாகவும், இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய வரலாறுகளை மாணவர்கள் கற்கின்ற நிலையில், இலங்கை வரலாற்றை கற்கும்போது, அதில் தமிழர் வரலாறு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.