யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் யாழ். நகரம் வெள்ளக்காடாக மாறிவருகிறது.
யாழ்ப்பாணம் பேரூந்து நிலயத்திற்கு அருகிலுள்ள நடைபாதை கடைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவம், குறித்த பகுதியில் போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால் குப்பைகள் தேங்கிய நிலையில் அடைக்கப்பட்டு காணப்படுவதனால், தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் உள்ளதாகவும், இதனால் அப்பகுதி வியாபாரிகள் பாரிய இடர்பாடுகளை எதிர் நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை பெய்து வரும் கன மழையால் யாழ்.நகரை அண்டிய வசந்தபுரம், நித்தியவெளி, சூரியவெளி மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளதாகவும், மழை வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.