ஆபிரிக்க நாடுகளுக்கான தனது முதல் அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று லைபீரியாவைச் சென்றடந்துள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகர் மொன்றோவியாவில் அமைந்துள்ள அனைத்துலக விமான நிலையத்தினை இன்று காலையில் சென்றடைந்த பிரதமர், அந்த நாட்டின் இராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட இராணுவ அணிவகுப்பினை லைபீரிய அதிபருடன் இணைந்து பார்வையிட்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அந்த நாட்டு இராணுவ மரியாதையினையும் ஏற்று்ககொண்டுள்ளார்.
முன்னைய பழமைவாதக் கட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது லைபீரியா என்ற நாடு கனடாவால் பெரிதும் கண்டுகொள்ளப்படாது இருந்த நிலையில், தற்போதய லிபரல் ஆட்சியில் பிரதமர் தனது முதலாவது ஆபிரிக்க பயணத்தின் போது முதலாவது நாடாக லைபீரியாவுக்கு சென்றுள்ளமை பல்வேறு தரப்பினரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவுக்கு லைபீரியாவில் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவுக்கு பொருளதார நலன்கள் எவையும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற போதிலும், பிரதமரின் இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளமை தமக்கு மிகவும் மகிழ்ச்சிளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கனேடிய அபிவிருத்தி நிபுணர்கள் சிலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் உயிர்கொல்லி நோயான எபோலா நோயால் பெரிதும் பாதிக்கப்படும் வரையில், உலகில் லைபீரியா கண்டுகொள்ளப்படாத ஒரு நாடாகவே இருந்து வந்த நிலையில், எபோலா தாக்கத்தினை மோசமாக எதிர்கொண்ட நாட்டுக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள இந்த முழுநாள் பயணம் பல்வேறு வரவேற்புகளையும் பெற்றுள்ளது.
குறிப்பாக அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக மடகஸ்கார் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அதற்கு முன்னதாக ஒருநாள் லைபீரியாவில் தங்கியிருந்து, அங்குள்ள பாடசாலைக்குச் சென்று மாணவர்கள், சிறுவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.