கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் சிரமதான பணிகள் அப்பகுதி மக்களினால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மூன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்ற போதிலும், தற்போது தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் இன்னமும் சிறிலங்கா இராணுவத்தின் வசம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் ஏனைய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களும் மக்களினால் சிரமதானம் செய்யப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த படையினர் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்னர் குறித்த காணி பற்றைகளால் சூழப்பட்டு, குறிப்பாக எருக்கன் செடிகளால் நிறைந்து காணப்பட்டதுடன், அங்கு இருந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கல் என்பன படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டும் காணப்பட்டன.
நாளை மறுநாள் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், இன்றைய சிரமதானப் பணிகளின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக துப்பரவு பணிகளில் ஈடுப்பட்டிருந்ததுடன், எவ்வித அசம்பாவிதங்ளோ, நெருக்கடிகளோ இன்றி சிரமதான பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை இம்முறை மாவீரர் நாளை துயிலும் இல்லத்தில் நினைவு கூர்வதற்கு சனநாயக போராளிகள் கட்சி ஏற்பாடுகளை செய்துள்ளதாக கட்சியின் ஊடகப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
தமிழர் சகவாழ்விற்கும், இனமானம் காத்திடவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக பிரதேசம் எங்கும் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளை தமது கட்சி மேற்கொண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இன்று முதல் 27 ஆம் நாள் வரை நினைவேந்தல் காலப்பகுதியாக கடைப்பிடிக்கப்படும் எனவும், இக்காலப்பகுதியில் உறவுகள் கேளிக்கை மற்றும் களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து, இனத்தை நேசித்து தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கியவர்களின் நினைவினை சுமந்து நினைவுகூரல்களில் ஈடுபடுமாறு சனநாயக போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு கிளிநொச்சி பகுதியில் இடம்பெறவுள்ளதாகவும், அன்றைய நாள் தாயக உறவுகள் அனைவரும் மலர்தூவி சுடரேற்றி எம் உறவுகளை நினைவில் கொள்ள, அனைவரையும் நினைவேந்தல் நிகழ்வில் உணர்வு பூர்வமாக கலந்துகொள்ளுமாறும் சனநாயக பேராளிகள் கட்சியின் ஊடகப்பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.