தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, பிரதிவாதிகள் தரப்பு விடுத்த கோரிக்கைக்கு இணங்க யூரிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள யூரிகள் ஏழுபேர் அடங்கிய யூரி சபை நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டு, சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகியதுடன், இன்று மூன்றாவது நாளாகவும் சாட்சி விசாரணை இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாக மாறிய பிருதிவிராஜ் மனம்பேரி நேற்றுப் புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் சந்தேகநபரான சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷை, ரவிராஜ் கொல்லப்படுவதற்கு முதல் நாள் கொழும்பு கங்காராமை லொன்றிவத்தை பகுதியில் வைத்து சந்தித்தபோது, அவருடன் இருந்த கடற்படை வீரர்கள் மூவரையும் மன்றுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் அறுவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறுபேரில், மூன்றுபேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், எஞ்சிய மூன்றுபேரிடம் தற்போதைய இந்த சாட்சி விசாரணை இடம்பெற்று வருவதுடன், குறித்த இந்த விசாரணை பத்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





