பொருத்து வீட்டுத் திட்டத்தை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியதான செய்தி முற்றிலும் பொய்யானது என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எந்த தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தாலும் அந்தத் திட்டத்தை தாம் நடைமுறைப்படுத்தியே தீரப்போவதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், வடமாகாண முதலமைச்சரும் ஏன் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றும் குறிப்பிட்ட அவர், அனைத்து நாடுகளிலும் இன்று பொருத்து வீடுகளே அமைக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
குறைந்த ஆட்செலவு மற்றும் பொருட் செலவுகளை குறைக்கின்ற வழியாகவே இந்த பொருத்து வீடு கையாளப்படுவதாகவும், இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனை எதிர்ப்பது அரசியல் நோக்கமாக இருக்குமோ என்பது தொடர்பில் தமக்கு தெரியவில்லை என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறே தாங்கள் ஆரம்பித்த இரணைமடு நீர் விநியோகத் திட்டம், வவுனியா பொருளாதார மத்திய நிலையத் திட்டம் என்பவற்றையும் தடுத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
எனினும் பொருத்து வீட்டுத் திட்டத்தில் அவர்களின் எதிர்ப்புக்களைத் தாம் பொருட்படுத்தப் போவதி்லை என்றும், மக்களுக்கு வீடுகளை வழங்க தாம் உறுதிவழங்கியுள்ள நிலையில், இந்த பொருத்து வீட்டுத் திட்டத்தை எந்தவகையிலும் விரைவில் ஆரம்பிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
30 ஆண்டுகால போரில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமா என்றே தாம் கேட்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், தனது திட்டத்திற்கு மாற்றுத் திட்டம் இருந்தால் அதனை முன்வைப்போரே வீடுகளையும் நிர்மாணித்து மக்களுக்கு கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.