மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அதனை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதையிட்டும் ஆராய்ந்து அறிக்கை தரவேண்டும் என்பதே தமக்குத் தரப்பட்ட ஆணை என்று அரசியலமைப்பு நிர்ணய சபையின் உப குழுவின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அதிகாரப் பரவலாக்கல் எவ்வாறு அமையவேண்டும், அதிகாரப் பரவலாக்கல் அலகு, அரசாங்கத்தின் தன்மை என்பனவற்றை வழிநடத்தல் குழுவே ஆராய்ந்து அறிக்கை தரும் என்றும், அவை தொடர்பில் ஆராயும் பொறுப்பு தமக்குத் தரப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மாகாண சபையின் அதிகாரங்கள், அதிகாரப்பரவலாக்கல் மற்றும் அரசின் தன்மை என்பன குறித்து இந்தக் குழு ஆராயவேண்டியதில்லை என்றும் ஆரம்பத்திலேயே தமக்குச் சொல்லப்பட்டுவிட்டதாகவும், அதனால் அந்த வரையறைக்குள் உட்பட்டே தமது குழுவின் செயற்பாடுகள் அமைந்திருந்தன எனவும் சித்தார்த்தன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பு உப குழுவின் பரிந்துரை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்க்பபட்டுள்ள நிலையிலேயே சித்தார்த்தன் இந்த விளக்கங்களை முன்வைத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசியலமைப்பு உப குழுவின் பரிந்துரையில் அரசின் தன்மை குறித்து அதாவது, ஒற்றையாட்சியா சமஷ்டியா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும், இந்த விடயத்திலிருந்து உப குழு நழுவிச் சென்றுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் இந்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவுகள் என்ற அடிப்படையில் சில விடயங்களை சித்தார்த்தன் தலைமையிலான உப குழு வலிந்து பரிந்துரை செய்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முக்கியமாக காணி, காவல்த்துறை அதிகாரங்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆளுநரின் அதிகாரம் சம்பிரதாயமானதாக இருக்க வேண்டும் எனவும், நிறைவேற்று அதிகாரம் அவருக்கு இருக்கக்கூடாது எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளையில் பிரதான வழிநடத்தல் குழு அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும், இந்த குழுவின் இடைக்கால அறிக்கை டிசெம்பர் மாதம் 10ஆம் நாள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் தன்மை, அதிகாரப்பரவலாக்கல் அலகு, அதிகாரப்பரவலாக்கல் விடயங்கள் என்பவற்றை உள்ளடக்கிய இன நெருக்கடிக்கான தீர்வாக இந்த இடைக்கால அறிக்கை அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.