மறைந்த முன்னாள் கியூப தலைவர் பிடல் காஸ்ரோ ஒரு சர்வாதிகாரியாக இருந்த போதிலும், அவர் தற்போது காலமான நிலையில், அவரது சாதனைகளை எடுத்துக் கூறுவது ஒன்றும் தவறான காரியம் அல்ல என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
பிடல் காஸ்ரோவின் மறைவினை அடுத்து பிரதமர் விடுத்த இரங்கல் செய்தி தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே, பிரமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடடின் முன்னாள் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அதிலும் கனடாவுடன் மிகவும் நீண்டகால உறவினைக் கொண்ட ஒரு நாட்டின் தலைவர் மறைந்துள்ள நிலையில், அவரின் மறைவை ஒட்டி விடுக்கப்படும் இரங்கல் செய்தியே அது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மடகஸ்காரில் இடம்பெறும் அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்குபற்றச் சென்றுள்ள பிரதமர் அங்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிடல் காஸ்ரோவின் ஆட்சியினால் அல்லது அரசாங்கத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியோர் வேறு விதமாகவே சிந்திப்பார்கள் என்பதனை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ விபரித்துள்ளார்.
இதேவேளை கியூபாவில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை தாம் ஒருபோதும் புறந்தள்ளி விடவிலலை எனவும், அண்மையில் தாம் மேற்கொண்ட கியூப பயணத்தின் போதும் அதனை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறான விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கியூபெக் முதல்வர் பிலிப் கோலியார்ட், கியூபாவில் பிடல் காஸ்ரோவின் மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறுவகை செல்வாக்குகள் குறித்தும் வரலாற்று நிபுணர்கள் விவாதிக்கின்ற போதிலும், இருபதாம் நூற்றாண்டின் மிக உயரிய தலைவராக அவர் திகழ்ந்தார் என்பதனை யாராலும் நிராகரிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.