கருணா குழு உறுப்பினர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டதாக, ரவிராஜ் கொலைவழக்கின் அரசு தரப்பு பிரதான சாட்சியாளரான முன்னாள் காவல்த்துறை கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கருணாவுடன் இணைந்து கிழக்கில் பல கொலைகளை செய்தாகவும் பிரித்திவிராஜ் சாட்சியமளித்துள்ளார்.
ரவிராஜ் கொலை வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு அறங்காவலர்கள் முன்னிலையில் நான்காவது நாளாக நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணியின் குறுக்குக் கேள்விகளுக்கு பிரித்திவிராஜ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை அழிப்பதற்காக தாம் கருணா குழுவுடன் இணைந்து செயற்பட்டதாக குறிப்பிட்ட பிரித்திவிராஜ், கருணா தரப்பு உறுப்பினராகன பழனிச்சாமி என்பவரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ரவிராஜின் கொலையுடன் தாம் தொடர்புபட்டதாக கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த கொலைச் சம்பவம் இடம்பெறும்வரை தாம் ரவிராஜை கொலை செய்யவுள்ளதை அறிந்திருக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருணா குழுவுடன் தாம் கொண்டிருந்த தொடர்பை தமது மேலதிகாரிகளுக்கு தெரிவித்திருக்காத காரணத்தினாலேயே, ரவிராஜ் கொலையையும் தமது மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லையென பிரித்திவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24ஆம் நாள் இடம்பெற்ற விசாரணையின்போது, ரவிராஜ் கொலைவழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான முன்னாள் கடற்படை வீரர் காமினி செனவிரத்னவே ரவிராஜின் வாகனத்தை நோக்கி சுட்டதாகவும், அவரை தாம் கங்காராம பகுதியில் காணப்பட்ட கடற்படை முகாமுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்ததாகவும் பிரித்திவராஜ் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.