அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வில், வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் இதுவரை எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அபிவிருத்தி தொடர்பாக தமிழரசுக்கட்சியின் திருமலை மாவட்ட உறுப்பினர்களை தனது இல்லத்தில் சந்தித்து பேசியபோதே சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.
அரசயிலமைப்பு சீர்திருத்தத்தில் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட் அவர், அதுதொடர்பில் இதுவரை எவ்வித இறுதி முடிவுகளும் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிமுறை, ஒழுங்கு, சமயம் தொடர்பாக நாட்டில் இருக்ககூடிய நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், தம்மைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாகவும், எனினும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைப்பை பொறுத்தவரையில் முடிவு எடுப்பதற்கு சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளதாகவும், இந்த விடயத்தில் தாங்களும், முஸ்லிம் மக்களும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரமுடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம்களுடனான உடன்பாட்டை காணாது இந்த விடயத்தை நிறைவேற்றுவது கடினம் எனவும், அதேவேளை தங்களுடைய இணக்கப்பாடும், தங்களுடனான ஒற்றுமையும் இல்லாது முஸ்லிம்களாலும் ஒரு தீர்வையும் பெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் இந்த விடயத்தில் இரண்டு தரப்பும் நன்கு ஆராய்ந்து சில விட்டுக்கொடுப்புக்களுடன் முடிவொன்றை எட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதற்கு தாம் முயன்று வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியும் என எண்ணுவதாகவும் இரா.சம்பந்தன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ன் முற்பகுதியிலாவது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு விடும் எனவும், எமது மக்களின் அனுமதியின்றி எதையும் தாம் செய்யப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்துடன் பல முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்படுவதாகவும், சட்டவாக்கம், நிர்வாகமுறை- காணிச் சட்டம், பொது பாதுகாப்பு, நிதி ஒழுங்கு என்பவை இவற்றில் பிரதானமானவை எனவும், நாடாளுமன்ற ஒழுங்குபடுத்தல் குழு, உப குழு, உட்பட பல்வேறு நிபுணர்கள் குழுவுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிங்களத் தலைவர்களின் மன நிலையில் மாற்றமேற்பட்டுள்ளதை நீண்டகால அரசியல் வரலாற்று அனுபவமுடைய தன்னால் உணர்ந்து கொள்ள முடிவதாகவும், 1977ம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அனுபவங்களின் அடிப்படையில் இந்த மாற்றங்களை தன்னால் உணர முடிவதாகவும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.