ஒன்ராறியோவில் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில், பதிதாக மேலும் பல நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், நீதிமன்றப் பணியாளர்களையும் சட்டமா அதிபர் நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக குற்றச்செயல்களின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோரில் சிலர் குற்றவாளிகள் அல்லாத போதிலும், அவர்களுக்கான வழங்கு விசாரணைகள் தாமதமடைவதால் தடுப்புக் காவல்களில் நீண்டநாள் தடுத்துவைக்கப்பட்டிப்பதனை தவிர்க்கும் பொருட்டே, வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
வழக்கு விசாரணை ஒன்றின் முடிவுக்காக காத்திருக்கக் கூடிய கால எல்லை, மாநில அளவில் 18 மாதங்கள் எனவும், உச்ச நீதிமன்றத்திற்கு 30 மாதங்கள் எனவும் கடந்த யூலை மாதம் கனேடிய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையிலேயே, இந்த விசாரணை துரிதப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து ஒன்ராறியோவில் சுமார் 6,000 குற்றவியல் வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டிய அல்லது மீட்டுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையிலேயே, வழக்குகளைத் துரிதப்படுத்தும் வகையில் புதிதாக 13 மாநில நீதிபதிகளையும், 30ற்கும் அதிகமான சட்டவாளர்களையும், சுமார் 25 நீதிமன்ற பணியார்களையும் நியமிப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.