இலங்கையின் முன்னாள் சானதிபதி மகிந்த ராஜபக்சவை, இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா இன்று சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்றைய இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவருடன், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல்நிலைச் செயலர் அலுவாலியாவும் பங்கேற்றுள்ளார்.
அதேபோல மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல். பீரிசும், இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஒரு வாரகாலப் பயணத்தை முடித்துக் கொண்டு, மகிந்த ராஜபக்ச நேற்றுக் காலையே நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய கையுடன் இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா அவரைச் சந்தித்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் விரைவில் இலங்கையில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா, மரியாதை நிமித்தமாக பிரியாவிடை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.