கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய நாள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்திராபுரம் பிரதேசத்தில் 14 குடும்பங்களின் 25 ஏக்கர் காணிகளும், முகமாலையில் 55 குடும்பங்களுக்கான ஆயிரத்து 800 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நாள் விடுவிக்கப்படும் காணிகள், காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி போர் இடம்பெற்ற காலத்தில் மோதலில் ஈடுப்பட்ட இரண்டு தரப்பினர்களினதும் போர்க் களமாக காணப்பட்ட பிரதேசமாக இருந்தமையினால், பெருமளவு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் என்பன நிறைந்த பிரதேசமாக காணப்பட்டது.
இந்த பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஈடுப்பட்ட நிறுவனங்கள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து தங்களது பணியை முன்னெடுத்திருந்ததுடன், இதன் போது சில பணியாளர்கள் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது குறித்த பகுதிகள் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை முல்லைத்தீவு கேப்பாப்புலவின் ஒரு பகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாமிற்கு நேற்று மாலை அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம், கேப்பாப்புலவின் பாடசாலைக்கு எதிர்பக்கமாக உள்ள பகுதிகளில் குடியேறுவதற்கான இணக்கத்தினை இராணுவத்தினர் மக்கள் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளனர்.
கேப்பாப்புலவு மக்களைச் சொந்த இடத்தில் குடியமர்த்தாத சிறிலங்கா இராணுவம், 2012ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்களை கேப்பாப்புலவின் சூரிபுரம் பகுதியில் மாதிரிக் கிராமம் ஒன்றினை உருவாக்கி அதில் தங்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம்மைத் தமது சொந்த இடங்களில் குடியேற்றுமாறு கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி வரும் நிலையில், கேப்பாப்புலவின் ஒருபகுதியில் குடியேறுவதற்கான இணக்கப்பாட்டினை இராணுவம் நேற்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.