13 ஆவது திருத்தத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதனால் பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கொழும்பு மாநகர மேயர் கணேசலிங்கத்தின் 10 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்து மாமன்றம் மற்றும் இந்து வித்யா விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக அமையாது என்று கருதியிருந்த முன்னாள் சனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரும், 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும், அதனை திருத்தியமைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் அதனை செய்ய முடியவில்லை எனவும் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அனைத்துக் கட்சி குழுவை கூட்டி, நிபுணர் குழுவையும் நியமித்ததுடன், அந்த நிபுணர் குழுவும் அறிக்கை சமர்ப்பித்த போதிலும், இறுதியில் எதுவும் நடக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நிறைவேற்ற முடியாதுபோன அரசியலமைப்பு திருத்தத்தை, நிறைவேற்றக் கூடிய வகையிலான பெரும்பான்மை பலம் தற்போதய அரசாங்கத்திற்கு இப்போது இருப்பதாகவும், இந்த நிலையில் சனாதிபதியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அதனை அவரின் கருத்துக்கள் மூலமே புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் இரா சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கருமத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும், நம்பிக்கை வைக்காது கருமம் நிறைவேற்றப்படுமென நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர் எனவும், நாட்டின் வருமானம் நாட்டின் கடனைச் செலுத்தகூடப் போதுமானது அல்ல என்ற நிலையில், நாட்டில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.