புதிய தேர்தல் முறையில் உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாதென மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு எச்சரித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டபோதிலும், தேர்தலை நடாத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரோ அரசாங்கமோ தயாரில்லை என்றும், உள்ளுராட்சி சபைகளை உருவாக்க தயாரிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையானது இரண்டு பிரதான கட்சிகளுக்கு சாதகமாகவும், ஏனைய கட்சிகளை விரட்டியடிக்கும் முகமாகவும் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடாத்தப்படாமைக்கு எல்லை நிர்ணய பிரச்சினை காரணமல்ல என்றும் குறிப்பிட்டுள்ள அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வீட்டு பிரச்சினை தீர்க்கப்படும் வரை தேர்தல் நடைபெறப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் எல்லை நிர்ணய பிரச்சினை மற்றும் சிறிய கட்சிகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்பவற்றை தவிர்ப்பதற்கு, பழைய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடாத்துமாறு கோருவதாகவும், அவ்வாறு இல்லாது புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்பட்டால், நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
இதேவேளை அனைத்து கட்சிகளும் இணங்கினால் பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த முடியும் என்று அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் விருப்பு வாக்கு அடிப்படையில் தேர்தலை நடாத்த முடியும் எனவும், அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு புதிய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு காலம் தாமதிக்கும் என்றால், பழைய முறையில் தேர்தலை நடத்த முடியும் எனவும், அதற்கு அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.