மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடாத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தேரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், பொதுபல சேனா அமைப்பின் செயளாளரான ஞானசார தேரர் மற்றும் மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரர் உள்ளிட்டோர், மட்டக்களப்பில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பிரயோகித்த வார்த்தை பிரயோகங்கள் என்பன, மக்கள் மத்தியில் பெரும் பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேற்றுமை உணர்வை தூண்டும் வகையிலான சட்டமுறையற்ற ஒன்றுகூடலை தடுக்கும் நீதிமன்ற தடையுத்தரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிக்குகள் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நேரத்தில் கிழக்கு மாகாண மூத்த காவல்த்துறை மா அதிபர் சுமித் மற்றும் பிரதி காவல்த்துறை மா அதிபர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன், குறித்த அராஜகத்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவினை பெற்றுக்கொடுத்ததாகவும், அதுமட்டுமல்லாது ஞானசார தேரரை மட்டக்களப்பு நகரத்துக்குள் வரவிடாது தடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர் கலகம் அடக்கும் பிரிவு காவல்த்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த இடத்துக்கு விரைந்திருந்ததாகவும், இனவாத கருத்துக்களை பரப்பி, மக்கள் மத்தியில் ஒரு விதமான குழப்பகரமான சூழலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வாறான பிக்குகளின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் போடும் இவ்வாறான பிக்குகளின் நோக்கம் என்ன என்பது தெரியாமலுள்ள போதிலும், தமிழ் மக்கள் பிக்குகளின் செயற்பாடுகளை கண்டு மிகவும் அச்சத்தில் உள்ளதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.