வடக்குக் கிழக்கு மக்கள் இராணுவம் தேவை என்பதையே கூறி வருகின்றனர் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அரசியல் அழுத்தங்கள் மட்டுமே இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டுமென பல்வேறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும், வடக்கு,கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மக்களிடம் இது தொடர்பில் கேட்டால், அவர்கள் அவசர நிலைமை, அனர்த்த வேளைகளில் உதவ அவர்களுக்கு இராணுவம் தேவைப்படுகிறது என்றே கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அனர்த்த முகாமை மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காகவும், அப்பகுதிகளில் அதிகபட்ச தேசிய பாதுகாப்பிற்காகவும் இராணுவத்தை அங்கு வைத்திருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் கலந்துகொண்டிருந்ததுடன், அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, வடக்கில் இராணுவத்தினர் வசமிருக்கும் மேலும்பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 4,600 ஏக்கர் பகுதி கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாகவும், இராணுவம் வசமிருக்கும் இன்னும் பல ஏக்கர் காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டால் அதில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க முடியும் என்றும், அத்துடன் வடக்கில் விவசாயிகள், மீனவர்கள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.