அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றுள்ளன.
போரின் பேரழிவைச் சந்தித்த வடக்கு கிழக்கு மக்கள் தங்களின் மனித உரிமைகள் உறுதிப்படுத்துவது உளளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காணாமல் செய்யப்பட்டுள்ள தமது உறவுகள் தொடர்பில் தகவல் வெளியிடக் கோரியும் இன்றைய இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடாத்தியுள்ளனர்.
மட்டக்களப்பி்ன் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்துக்கு முன்பாக மனித சங்கிலி போராட்டமும், அங்கிருந்து காந்திப்பூங்கா வரையில் கவன ஈர்ப்பு பேரணியும் நடைபெற்ற நிலையில், அதில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டொர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில், காணாமல் போனவர்கள் சங்கம், மகளிர் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின் நிறைவில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அப்துல் அஸீசிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
அவ்வாறே வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களிலும் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெற்றுள்ளன.
காணாமற்போன உறவுகளுக்கு நீதி வேண்டியும், பக்கச்சார்பில்லாத விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியும், காணாமல்போனோர் விடயத்தில் நம்பிக்கையினைக் கட்டியெழுப்பக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் பல விடயங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுளள்ளனர்.