இலங்கையில் பௌத்த மதத்தை அழிப்பதற்கு நான்கு புறத்திலும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டையும், இனத்தையும், பௌத்த மதத்தையும் அழிப்பதற்கு நான்கு திசைகளிலிருந்தும் சூழ்ச்சி செய்யப்படுவதாகவும், சிறு சிறு பேதங்களை களைந்து பெளத்தர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து எழுந்து நிற்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியத்துவத்திற்குள் உள்ள தலைவர்களை இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாட்டு மக்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சொல்ல முடியாத பாவ காரியமொன்றின் பங்குதாரர்களாகிவிடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த தேசிய பிரச்சினையின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள பொதுபல சேனா விரும்புவதாகவம், அதுரலிய ரத்ன தேரரின் குரலும் தற்போது தேவைப்படுவதாகவும், சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரத்ன தேரர் ஆகியோர் இல்லாமல் இருந்திருந்தால் போரை வெற்றிகொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த, கோத்தாபாய ஆகியோர் போரை வென்றெடுக்க வழங்கிய பங்களிப்பினை பாராட்டுவது போலவே சம்பிக்க, ரத்ன தேரர் போன்றவர்களின் பங்களிப்பும் வரவேற்கப்பட வேண்டியது எனவும், தேசியத்துவத்தை எழுப்பி, போருக்கான உந்துதலை சம்பிக்க , ரத்ன தேரர் போன்றவர்களே வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச, கோத்தாபாய ராஜபக்ச, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன போன்றே சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரத்ன தேரர் போன்ற தேசியத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் பல்வேறு அரசியல் பிரவாகங்களை பிரதிநிதித்துவம் செய்தாலும் தற்போதைய சூழ்நிலையில் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்களவர்களை பிளவடைச் செய்து, தமது சிங்களத் தலைவர்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ள சில சக்திகள் சூழ்ச்சி செய்து வருவதாகக்வும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.