15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின்
21 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.
ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.
—————————————————————————–
தமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய அப்துல் ரவூப்.
என் மகன் அப்துல் ரவூஃப்-ன் ஈகம் பற்றிய சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை ‘முதல் நெருப்பு’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் தம்பி சே.ஜெ. உமர் கயான் நூலாக்கித் தந்துள்ளார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் ரவூஃப் பிறந்து, வாழ்ந்து மறைந்த ஊரில் தரவுகளை திரட்டித் தொகுத்து பதிவு செய்வது கடினமானதுதான். அப்துல் ரவூஃப்-ன் ஈகம் பற்றிய வரலாற்றை பதிவு செய்ய பலர் முன்வந்த போதும் தம்பி உமர் கயான் மூலம் நிறைவேறியுள்ளது. இந்நூலில் பல்வேறு செய்திகள், நிகழ்வுகள் விடுபட்டு போயிருப்பினும் இந்நூலாளர் அதையும் சுட்டிக் காட்டி அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்று கூறியிருப்பது என் மனதிற்கு இதமாக உள்ளது.
அப்துல் ரவூஃப்ன் ஈகத்திற்கு பிறகு தம்பி வழக்குரைஞர் தமிழகன் (தமிழ் காவிரி மாத இதழின் ஆசிரியர், தமிழக ஆறுகள் இணைப்பு இயக்கத்தின் தலைவர், திருச்சி) அவர்கள் ரவூஃபின் சுருக்கமான வரலாற்றுடன் நெருப்பின் வரிகள் என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அது ஒரு ஆவணமாக இன்றுள்ளது.
அப்துல் ரவூஃப் நெருப்பானான் என்ற செய்தி கிடைத்து நான் ஓடிச்சென்று அவனைப் பாத்தபோது, அவனது உள்ளாடை கங்குகளில் கணன்ற நெருப்பினை என் கையாலேயே அணைத்தேன். என்ன ராஜா இவ்வாறு செய்துவிட்டாயே என்று கேட்டபோது, அவன் சொன்னான் “பாபு அழாதீர்கள், நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள், மாவீரனைப் பெற்ற தந்தையாக நில்லுங்கள், ஈழத் தமிழரை காப்பதற்காக உங்கள் மகன் உயிர்த்தியாகம் செய்திருக்கிறான் என்று பெருமைப்படுங்கள்” என்று படபடத்தான்.
அதையும் மீறி நான் அழுதபோது அவன் சொன்னான், “என்ன பாபு உங்களையே நான் மாவீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்களே அழலாமா?”
“கண்ணா ஈழத்தமிழரை காப்பாற்ற எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது” என்று கூறியபோது, “இதனைத் தவிர எனக்கு வேறு வழித் தெரியவில்லை பாபு” என்றான்.
மருத்துவமனையில் கணீர் குரலில் அவன் பேசிய பேச்சுக்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைவிற்குப் பிறகு நடக்கக் கூடாத சம்பவம் தமிழகத்திலே நடந்துவிட்டதே என எண்ணி தமிழக மக்கள், ஈழத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் பேரில் வெறுப்புடன் இருந்த நேரம், ஈழத்தில் சிங்களக் காடையர்களால் தமிழர்கள் ஈவூ இரக்கமின்றி கொன்று குவிப்பதை அறிந்தும், வாய்திறவாமல் மௌன சாட்சியாக இருந்த நேரம், யாழ் நகர மக்கள் 5 லட்சம்பேர் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள புலம் பெயர்ந்து காடுகளில் தஞ்சம் புகுந்தும், வெளிநாடுகளில் ஏதிலிகளாக தஞ்சம் அடைந்த நேரம், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், இனி ஈழம் என்பது கனவுதானோ என்று எண்ணிய நேரம், தாய் தமிழகத்தின் ஆதரவு எமக்கில்லையோ என விடுதலைப் புலிகள் சோர்ந்திருந்த நேரம், அப்துல் ரவூஃப் தன் உயிரை ஈகம் செய்தது தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்ற வரலாற்றுப் பதிவாக இந்நூல் இருக்கும்.