காணி, காவல்த்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கும், ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் உபகுழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்போது, வழங்கப்படும் தீர்வு மீண்டும் ஒரு போரை ஏற்படுத்தாதவாறு – நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
போரினால் வடக்கு-கிழக்குத் தமிழர்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை எனவும், முஸ்லிம்களும் சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு-கிழக்கு பாதிக்கப்பட்ட அதேவேளை தெற்கும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
முழு நாட்டையும், நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் போர் பாதித்துள்ளதனால், முழு நாட்டையும் அனைத்து இனங்களையும் கருத்தில் கொண்டே அரசியல் தீர்வு தயாரிக்கப்பட வேண்டும் எனவும், வடக்கு-கிழக்கை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தீர்வை உருவாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை இனவாதத்தோடு பார்க்கக் கூடாது என்பதுடன், தாம் இனவாதிகள் அல்ல எனவும் தெரிவித்துள்ள அவர், அனைத்து இனங்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதுடன், முழு நாடும் நன்மையடைய வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும், தாம் முன்வைக்கும் தீர்வு எதிர்காலச் சந்ததியினருக்கு ஆபத்து இல்லாததாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வு என்ற பெயரில் எதிர்காலச் சந்ததியினருக்கு மீண்டும் ஒரு போரை திணித்து விடக்கூடாது எனவும், மாகாண சபைகளுக்கு காவல்த்துறை, காணி அதிகாரம் வழங்குவது போன்ற எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும், அவை நாடாளுமன்றுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் எனவும், அதன் பின்னர் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசமைப்பையும் மக்களையும் வைத்து தாம் அரசியல் சூது விளையாடப்போவதில்லை எனவும், குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் நோக்கம் தம்மிடம் இல்லை எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்