சமஸ்டி ஆட்சி முறைமையுடன் கூடிய அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க நேரிடும் என்று பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தேரர் இல்ஙகை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாரஹென்பிட்டி அபாயராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கையில் புதிதாக அமையவுள்ள அரசியல் அமைப்பு குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு பாதகமான, நாட்டை பிளவடையச் செய்யக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டால், பௌத்த மாநாயக்க தேரர்கள் ஆயிரக் கணக்கில் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவார்கள் எனவும், எதிர்வரும் சனவரி மாதம் முதல் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு அரசியல் அமைப்பினையும் அரசாங்கம் கொண்டு வரக் கூடாது எனவும் எச்சரித்துள்ள அவர், நாட்டுக்கு பாதகமான சட்டங்கள் இயற்றப்பட்ட போது பௌத்த பிக்குகள் நாடாளுமன்றிற்குள் பிரவேசித்து அவற்றை கிழித்து எரித்த வரலாறு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் சமஸ்டி என்ற பெயரில் நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் அமைப்பு குறித்து விகாரைகள் தோறும் தெளிவூட்டப்படும் எனவும் முத்தட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.