அமெரிக்க தேர்தல் பரப்புரையில் ரஷ்யா தலையிட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க சனநாயக கட்சி மற்றும் ஹிலரி கிளிண்டனின் முக்கிய உதவியாளரின் மின்னஞ்சல்களை, வலையமைப்பை ஊடுருவி தரவுகளை திருடியிருப்பதாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பு ஊடுருவல்களுக்கு பின்னால், ரஷ்ய அதிபர் அலுவலகத்துடன் தொடர்புடைய ரஷ்ய ஊடுருவலாளர்கள் இருந்திருப்பதற்கு பெரும் சான்றுகள் இருப்பதாக அமெரிக்க உளவு துறை நிறுவனங்கள் கூறியுள்ளன.
இந்த இணையவெளி தாக்குதல்களின் பின்னால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருப்பதாக நேற்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு வெளியான சில மணிநேரங்களில், அமெரிக்காவின் தேர்தல்களின் நேர்மைத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்தவொரு வெளிநாட்டு அரசு முயலும்போதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நேரத்திலும், இடத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஓபாமா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் சில வெளிப்படையாகவும், பொதுவாக அறிவிக்கப்பட்டும் நடைபெறும் அதேவேளை சில நடவடிக்கைகள் ரகசியமாகவும் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஷ்யா மீது சாட்டப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டை அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்பும் மறுத்துள்ளார்.
ரஷ்யா இணைய ஊடுருவலில் ஈடுபட்டது உண்மை எனினின் , ஏன் இவ்வளவு காலம் நடவடிக்கை எடுக்காது ஹிலாரி கிளிண்டன் தோல்வியடையும் வரை வெள்ளை மாளிகை காத்திருந்தது என்றும் அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.