இலங்கையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு, குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து நாட்கள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ள அவர், வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூடுதலாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும், இது தொடர்பில் தாம் நாடாளுமன்றில் அண்மையில் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வு சம்பந்தமான இணக்கப்பாட்டுக்கு கட்டாயம் ஒரு அளவு உள்ளதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பிலான இணக்கத்துக்கு அளவுகோல் இருக்கத்தான் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆளுநர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், மத்திய அரசுக்கும் – மாகாணத்துக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு எப்படி இருக்கவேண்டும் என்று ஆராய்வதற்கு மூவர் அடங்கிய உப குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ்க் கட்சிகள், குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வு விடயத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்து வருவதாகவும், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பில் அரசின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது என்றே தான் நினைப்பதாகவும், எவ்வளவோ பிரச்சினைக்குரிய விடயங்களைத் தீர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் விவாதம் நடைபெறும் எனவும், இந்தக் காலப் பகுதியில் வழி நடத்தல் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.