மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் விடயத்தில் பல்வேறு முனைகளிலும் கனடா முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ள போதிலும், பழங்குடியின மக்கள் விவகாரத்தில் அவ்வாறான நிலைமை காணப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டில் மனித உரிமைகள் விடயத்தில கனடா சிறப்பான முன்னேற்றத்தினை பதிவு செய்துள்ள போதிலும், பிரதமர் ஜஸ்டின் ரூடோ உறுதியளித்ததற்கு மாறாக பழங்குடியின மக்களது உரிமைகள் உள்ளிட்ட மேலும் சில விடயங்களில் கனடா இன்னமும் முன்னேற வேண்டியுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் கனேடிய செயலாளர் நாயகம் அலெக்ஸ் நேவ் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக நாடுகளில் இருந்து மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதற்கான போராட்டங்களிலும், பாலின சமத்துவ விடயங்களிலும் கனடா சிறப்பான செயற்பாட்டினை பதிவு செய்துள்ளதுடன், பல இடங்களில் அதனை தலைமையேற்று முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பில்லியன் டொலர்கள் பெறுமதியான சவூதி அரேபியாவுக்கான ஆயுத வினியோகம், சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் கொலம்பிய நீர்த்தேக்கத் திட்டம் உள்ளிட்ட விடயங்களில், மனித உரிமைக்கான புள்ளிகளை இழக்கும் நிலை கனடாவுக்கு ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழங்குடியின மக்களுக்கான உரிமை விடயத்தில், வடபிராந்திய எண்ணெய் வினியோக குழாய் அமைப்புத் திட்டத்தனை கைவிடுவதான கனேடிய அரசின் முடிவு, பழங்குடியின மக்களுக்கான உரிமையை வென்று கொடுத்துள்ள போதிலும், பிரிட்டிஷ் கொலம்பிய அணை கட்டும் விடயத்தில் பழங்குடியின மக்களின் உரிமை கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
புதிய லிபரல் அரசாங்கம் பழங்குடியின மக்களது விவகாரத்தினை கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ள போதிலும், பழங்குடியின மக்களது உரிமைகள் இன்னமும் போதிய அளவில் பாதுகாக்கப்படவில்லை என்பதே தமது கவலை எனவும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் கனேடிய கிளை தலைமை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.