யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக சங்கத்தான பகுதியில் இன்று முற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலாவுக்காக 14 சிங்களவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூர்தியே சிக்குண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 3 பெண்களும், 7 ஆண்களும் என 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அவர்களின் சடலங்கள் முன்னதாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த அந்த சிற்றூர்தியில் பயணித்த ஏனைய மூவர் மோசமான காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 17 பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஹய ரக சிற்றூர்தியின் சக்கரம் ஒன்றில் காற்றுப் போனதை அடுத்து, அது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வழித்தடத்தினை விட்டு விலகி பேரூந்துடன் மோதியதாக தெரியவருகிறது.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்