கனேடிய மத்திய அரசாங்கத்திற்கான தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்களையும் மறுசீரமைப்புகளையும் மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அண்மையில் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அங்கும் பொதுவான வாக்கு எண்ணிக்கை மற்றும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான நிலைப்பாடு குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையிலேயே கனடாவின் தேர்தல் வாக்களிப்பு முறையிலும் மாற்றங்களை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கனேடிய மத்திய தேர்தல்களில் தற்போது வரை நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகவும், கடந்த பொதுத் தேர்தலே அவ்வாறான விதிகளைப் பின்பற்றும் இறுதித் தேர்தலாக இருக்கும் என்றும் தேர்தல் பரப்புரைகளின் போது லிபரல் கட்சித் தலைமை கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான உறுதிமொழிகளுடன் 2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம், தற்போது அந்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், வாக்களிப்பு முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை ஆரமபித்துள்ளது.
அந்த வகையில் தேர்தல் நடைமுறைச் சீர்திருத்தம் தொடர்பிலான ஆலோசனைகளை இணையம் வழி வழங்குமாறு பொதுமக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன்,, MyDemocracy.ca எனப்படும் இணையத்தளம் வழியாக பொதுமக்கள் தமது தெரிவுகளை முன்வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
எனினும் இந்த இணையவழி கருத்தெடுப்பு தொடர்பிலும் சர்ச்சைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், எவ்வாறான சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்ற தீர்மானத்தினை லிபரல் அரசாங்கம் ஏற்கனவே மேற்கொண்டு விட்டதாகவும், அடுத்த ஆண்டில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.