போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருத்து வீடுகளை அமைத்துதருமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தே, அவ்ற்றினை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அதிகாரி ஒருவரை ஆதரம் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உறுதிப்படுத்திய போதிலும், இந்த அனுமதி நிபந்தனையுடன் கூடியது எனவும் தெரியவந்துள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65 ஆயிரம் பொருத்து வீட்டு திட்டத்தை வடக்கில் நடைமுறைப்படுத்துவதற்கு, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் வடபகுதியின் சிவில் சமூகம், வீடமைப்பு நிபுணர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட உள்ளுர் மற்றும் தேசிய ரீதியான அரசியல்வாதிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் தாமதமடைந்து வருகின்றது.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடங்கலாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்களை கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்த அமைச்சர் சுவாமிநாதன், பொருத்து வீடுகளை அமைத்துக்கொள்ள விரும்பும் பொதுமக்களை விண்ணப்பிக்குமாறான விளம்பரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிடுமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையிலேயே மக்கள் விருப்புக்கு அமைய முதற்கட்டமாக பத்தாயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதிராக முதல் முறையாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மக்களையும், பொது அமைப்புக்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருத்து வீடுகள் தமது சூழலுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள், தமது வாழ்க்கை முறை, தமது பிரதேசத்தின் காலநிலை, பாரம்பரிய கட்டடமுறை என்பவற்றை கருத்திற்கொண்டு வீடுகளை அமைத்துத்தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஆரம்பத்தில் இருந்தே பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் ரணில் அரசு தமது கருத்தை புறந்தள்ளிவிட்டு வீடமைப்பு விவகாரத்தில் முடிவுவெடுத்தால், தாம் பதவி விலகப்போவதான அறிவிப்பினை விடுக்கவுள்ளதாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.