ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு ந்டைமுறைப்படுத்தியது என்பது தொடர்பான எழுத்து மூலமான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் பேரவையில் வெளியிடவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் நாள் முதல், மார்ச் மாதம் 24ஆம் நாள் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத் தொடரின் போது இலங்கை குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மார்ச் மாதம் 22ஆம் நாள் சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடும் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க உள்ளதுடன், அரசாங்கத்தின் தரப்பிலும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 30ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்படதுடன், அதற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.