இலங்கையில் மோதல்களின் போது இடம்பெற்ற போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களினதும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களினதும் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை, ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் மூவர் உட்பட, ஐவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்துள்ளதன் மூலம், நீதியமைச்சர் எதனைக் கூறினாலும் இலங்கையின் நீதித்துறை குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என்று தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு நவம்பர் பத்தாம் நாள் கொழும்பு நாராஹேன்பிட்டியில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ரவிராஜ் படுகொலை வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த போதிலும், மைத்ரி – ரணில் அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதும் குறித்த விசாரணைகள் துரிதப்பட்டிருந்தன.
இதற்கமைய 24 ஆம் நாள் அதிகாலை வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், நேவி சம்பத் என்பவர் உட்பட சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் மூவர் அடங்கலாக, படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றின் இந்தத் தீர்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை தந்துள்ளதை தாம் மட்டுமன்றி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலஙகையின் நீதித் துறை தொடர்பில் இருந்த நம்பிக்கையீனங்கள், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதை அடுத்து களையப்பட்டு கட்டியெழுப்பட்டுவந்த நம்பிக்கை, ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை அடுத்து தகர்ந்து போயுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.