வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பு கல்முனையில் இடமபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
வடகிழக்கு இணைப்பு என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு 18 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், முஸ்லிங்களும், தமிழர்களும் இணைந்த வடக்கு-கிழக்கு தாயகத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் தமது குறிக்கோள் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து வரவேண்டும் என்று இந்த நிகழ்வில் பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், சென்ற முறை மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு தேவை என்பதற்காகத்தான் முதலமைச்சு பதவியினையும் அவர்களுக்கு கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுளு்ளார்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பது ஒரு துரதிஸ்ரவசமான உண்மை எனவும் அவர் அதிரு்பதி வெளியிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தாங்கள் இல்ஙகை சனாதிபதியிடம் கூறியதாகவும், அதற்காக வேண்டி முஸ்லிம்களுடன் பேசுமாறுகூட கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதற்காக பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழலுக்குள் தாங்கள் இருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை தீர்மானத்தினை தாங்கள் இப்பொழுது கோரவில்லை என்ற போதிலும், அதற்கு மாறாக முழுமையான அதிகாரத்தை கொண்டிருக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினையே கேட்டு நிற்பதாகவும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்துள்ளார்.