மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர், வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி இராமச்சந்திரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் அறைக்குச் சென்று அங்கு இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கும் வணக்கம் செலுத்திய பின்னர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக கோப்புகளில் கையெழுத்திட்டு முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும் அவா இன்று ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்த தொடண்டர்கள் மத்தியில் முதல்முறையாக உரையாற்றிய அவர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடையாளம் என்றும், இவர்களைத் தவிர வேறு யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி எனவும் கூறியுள்ளார்.
இன்று விமர்சிப்பவர்களும்கூட, நாளை மனமுவந்து பின் தொடரும் அளவுக்கு ஒரு புனிதமான பொது வாழ்வை மேற்கொள்வோம் என்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய புதிய பொதுச் செயலாளரன சசிகலா தெரிவித்துள்ளார்.