அச்சம் மற்றும் பிரிவினை ஆகியவை உள்ளிட்ட அரசியலுக்கு எதிராக செயற்படுவதே தமது 2017ஆம் ஆண்டுக்கான தீர்மானமாக உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மணி நேரங்களில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள புத்தாண்டு வரவேற்புச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் அனைவரையும் எவ்வாறான நடவடிக்கைகள் ஒன்றிணைக்குமோ, அவற்றிலேயே பிறக்கவுள்ள இந்த புதிய ஆண்டில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறக்கவுள்ள ஆண்டு கனடாவின் 150ஆவது பிறந்தநாளையும் தாங்கி மலரவுள்ள நிலையில், எமது முன்னைய சந்ததியினரை நாம் அனைவரும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை இன்றுடன் நிறைவுக்கு வரும் 2016ஆம் ஆண்டில் தமது அரசாங்கம் மத்திய தர மக்களுக்காக ஏற்படுத்திய வரிச் சுமைக் குறைப்புக்களையும், குழந்தைகள் நலத் திட்டங்களையும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதன் போது நினைவுகூர்ந்துள்ளார்