தமிழகத்தில் காளையடக்கும் போட்டிகளை நடாத்துமாறு வலியுறுத்தி, மதுரை மாவட்டம், அலங்கா நல்லூரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழத்தின் பொருளாளருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சித் தொண்டர்களுடன் அந்த பிரதேச மக்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், எதிர்வரும் தைத்திருநாளில் காளையடக்கும் போட்டிகளை நடாத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடத்துள்ளார்.
தமிழக இளைஞர்களின் உணர்வுகளையும், தமிழ் பண்பாட்டின் பெருமையையும் மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது ஆட்சி பொறுப்பில் இருந்திருந்தால் காளையடக்கும் போட்டிகளை நடாத்தும் சூழலை ஏற்படுத்தியிருக்கும் என்றும் கூறியுள்ள ஸ்டாலின், தற்போது காளையடக்கும் போட்டிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விடயத்திலும் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்கிறது என்றும் சாடியுள்ள அவர், அவசர சட்டமொன்றை கொண்டு வந்து காளையடக்கும் போட்டிகளை நடாத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.