வடமாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான 2ஆம், 3ஆம் அமர்வுகளில், வடமாகாண அடகு பிடிப்போர் நியதிச்சட்டம் முன்மொழியப்படவுள்ளது.
இந்த நியதிச்சட்டம் ஊடாக வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் அடகு பிடிப்போர் தன்னிச்சையாக பொருட்களுக்கான பெறுமதியை தீர்மானித்தல் மற்றும் வட்டியை தீர்மானித்தல் போன்றன தடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் அடகு பிடிப்போர் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட வகையில் பொருளுக்கான பெறுமதியை தீர்மானிப்பதும், வட்டி வீதத்தை தீர்மானிப்பதுமாக உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமாகாணசபையின் வரவு செலவுத் திட்ட அமர்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மாகாணத்தில் உள்ள அடகு பிடிப்போரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வடமாகாண அடகு பிடிப்போர் நியதிச்சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நியதிசட்டம் இந்த ஆண்டு முற்பகுதியில் இட்ம்பெறவுள்ள அமர்வுகளில் சபை அங்கீகாரத்திற்காக முன்மொழியப்படவுள்ளது.
இதேபோல் மாகாண கனியவள நியதிச்சட்டம் மற்றும் நிதி நியதிச்சட்டத்தின் கீழ் நீதிமன்ற தண்டப்பணங்களை கைமாற்றும் நியதிச்சட்டம் ஆகிய மேலும் இரண்டு நியதிச்சட்டங்களும் இந்த ஆண்டின் முற்பகுதியில் நிறைவேற்றப்படவுள்ளன.