தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பொங்கலுக்கு அதை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவிலும் தமிழர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
வர்ஜீனியா மாகாணம் ரிச்மண்ட் நகரில் டீன் ரப்பார்க் அரங்கில் இப்போராட்டம் நடந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடினர்.
கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை ஏந்தி இருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களையும் எழுப்பினர்.
இப்போராட்டத்துக்கு கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல மாநிலத்தவர்களும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அம்மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அமைக்கப்படும். நாட்டு மாடுகளின் வீர விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் பெருமளவில் நாட்டு மாடுகள் அழிந்துவிட்டன.
எனவே இருக்கும் நாட்டு இன மாடுகளை கட்டிக்காக்க மத்திய அரசு இந்த தடையை உடைத்து எறிய வேண்டும் என வலியுறுத்தினர்.
அமெரிக்காவில் 3700 பேருக்கும் அதிகமானோரிடம் கையெழுத்து வாங்கி பிரதமர் மோடிக்கு மனு அளித்துள்ளனர். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர கத்திடம் இந்த மனு வழங்கப்பட்டுள்ளது.