ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வினை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினனார்கள் என்ற போதிலும், இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்ல எனவும் அவர் சாடியுள்ளார்.
இவ்வாறான காரணத்தினால், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கட்சி என்ற வகையில் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதா, அரசியலமைப்பு சட்டவாக்க சபையில் அங்கம் வகிப்பதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.