ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சானி (Akbar Hashemi Rafsanjani)காலமான நிலையில், ஈரானில் மூன்று நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
1989-ஆம் ஆண்டிலிருந்து 1997-ஆம் ஆண்டு வரை ஈரானின் அதிபராகப் பதவி வகித்த அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சான், உடல்நலக் குறைவு காரணமாக தமது 82ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
காலமான முன்னாள் அதிபர் அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சானிக்கு இன்று மரியாதை செலுத்திய ஈரானின் மூத்த தலைவரும், பழமைவாதியுமான அயதுல்லா அலி கமெனி (Ayatollah Ali Khamenei), மிதவாதியான ரஃப்சஞ்சானி பல போராட்டங்களை சந்தித்தவர் என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த ரஃப்சஞ்சானி தமது அதிபர் பதவிக் காலத்தின் பின்னரும் ஈரான் அரசியலில் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வந்ததுடன், கடும்போக்கு கொள்கைகளை விடவும் நடைமுறைக்கேற்ற கொள்கைகளுக்கே ஆதரவளிப்பவராக இருந்தார்.
அத்துடன் தற்போதைய அதிபர் ஹசான் ருஹானியின் முக்கிய ஆதரவாளராகவும் அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சான் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.