நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் போது சிறிலங்கா காவல்த்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று காலை 10 மணி முதல் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமைய நடைபெற்ற இந்த நிகழ்வில், ஈகைச் சுடரேற்றி இறந்தவர்கள் நினைவாக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதான நினைவுத் தூபிக்கு வடமாகாணப் பதில் முதலமைச்சரும், வடமாகாண விவசாய அமைச்சருமான ஐங்கரநேசன் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியதனைத் தொடர்ந்து, ஏனைய நினைவுத் தூபிகளுக்கும் மலர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவுரைகளை வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடமாகாண சபையின் பதில் முதலமைச்சர் ஐங்கரநேசன், தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், ரவிகரன், சிவநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், பிரபல சட்டத்தரணியும் தந்தை செல்வாவின் நெருங்கிய நண்பருமான நவரத்தினம் ஆகியோர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து சிவசேனை அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான மறவன் புலவு சச்சிதானந்தன் எழுதிய ‘தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் பொன்மதிமுகராஜா விஜயகாந்த், வலி.வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சஜீவன், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.