நல்லிணக்க பொறிமுறைமை குறித்த ஆலோசனை செயலணியின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், செயலணியின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
உண்மை மற்றும் நீதி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகள் இந்த அறிக்கையின் மூலம் தெளிவாகின்றது என்பதனையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறையின் கீழ், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற செயலணியின் பரிந்துரை மிகவும் முக்கியமானது எனவும் அது தெரிவித்துள்ளது.
காணிப் பிரச்சினைகள், காணாமல் போனோர் விவகாரம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த செயலணி பரிந்துரைகளை முன்வைத்துள்ள நிலையில், கால மாறு நீதிப் பொறிமுறைமை குறித்து இலங்கை வாழ் அனைத்து இன சமூகங்களினதும் பிரதிபலிப்புக்களை இந்த செயலணி வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் பரிந்தரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள அவர், கால மாறு நீதிப் பொறிமுறைமை தொடர்பிலான பரிந்துரைகளை அனைத்து இன சமூகங்களினதும் பிரதிநிதித்துவத்துடன் முன்வைக்க இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து இந்த செயலணி பரிந்துரைகளை தயாரித்துள்ளதாகவும், இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மட்டுமன்றி, சொந்த நாட்டின் அனைத்து இன மக்களும் நல்லிணக்கம் மற்றும் நீதியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றே விரும்புகின்றார்கள் என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.